Monday, September 28, 2015

ஒரு தலை உரையாடல்மெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல!

கடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள! அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது!

நாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு!

இயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்!

இயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்!

சில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை! சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும்! ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்!

கடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ!

இந்த பாழாய் போன கண்ணியம் கண்களுக்கு இல்லையே!

அங்குலம் மறக்காமல் ரசிக்கும் கண்களை என்னால் கட்டி போட முடியவில்லை!

கடிவாளம் கழட்டி காண்பதற்கு மட்டும் அனுமதி அளித்தேன்!

அருகில் அமர்ந்து மணல் பரப்பில் விரல் கொண்டு கோலம் போடும் குமரி குழந்தையாய் நீ!

காற்றின் மீது லேசாய் பொறாமை, நான் தள்ளி அமர்ந்திருக்க உன்னை இடை விடாமல் தொட்டு செல்லும் காற்றை சபித்தேன்!

மணல் ஒட்டிய விரல்கள் கூட ஆபரணம் பூண்டது போல ஜொலிப்பதாய் உணர்ந்தேன்!

நீ என்ன நினைப்பாய்!

என்னை போல நீயும், உஹும் பாழாய் போன ஆண் மனதுதான்.. ஊடலின் போதும் கூடல் பற்றி நினைத்து தொலையும்!

பெண்கள் மனது?

அது தெரிந்திருந்தால் இந்நேரம் இரண்டு உலக போர்கள் வந்திருக்காது!

உலக போருக்கும் பெண்ணுக்கும் என்னதான் சம்மந்தம்! சத்தியமாக எனக்கும் தெரியாது! பெண் மனது என்று வந்து விட்டாலே இது போன்ற திராபையான உவமைகள் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு!

சரி ஊடல் கூடல் என்று போகும்போது அரசியல் ஆணாதிக்கம் பெண்ணியம்  எதற்கு!

என் கண்கள்! சீ  தொல்லை பண்ணாதே என்று என்னை அதட்டி விட்டு!
மறுபடி தன்  களவாணித்தனத்தை தொடர்ந்தது!

மனது என் கண்ணிடம், இப்படி பார்த்து பார்த்து ஏற்றி விட்டு நீ  தூங்கி விடுகிறாய், ஆனால் தூக்கத்திலும் விழித்திருக்கும் என் பாடுதான் திண்டாட்டம் ஆகிறது என கூறி முடிக்கும் முன்!

அவள் திரும்ப! என் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்த நொடி! மன மந்தி செயல் அற்று நின்றது! எவ்வளவோ உசுப்பியும் எழுந்திருக்க மறுத்தது!

சில நொடி பார்வை! அவள் அழகிய கண்களுக்குள் துளிர்த்து துருத்தி கொண்டிருந்த அந்த கண்ணீர் துளி!

அடுத்த நொடி மனம் விழித்து கொண்டது, அது ஆண்கள் மனதின் அதி அற்புத சிறப்பம்சம்.  நீயா நானா என்ற உக்கிர போட்டியின் முடிவை அறிவிக்கும் நொடி!

கண் கலங்கி நிற்க! மனது அப்போதுதான் விழித்திருக்க! வாய் மட்டும் அதிகபிரசங்கிதனமாய் அனிச்சையாய் வார்த்தைகளை உதிர்த்தது! தவறு யாருடையது என்று தெரியாவிடினும்!

"தவறு என்னோடதுதான், என்னை மன்னித்து விடு"

கண்கள் அவள் அசைவை நோக்கி நிற்க! மனது அவள் பதிலிற்கு காத்து நிற்க!

அரை நொடி யுகமாய் மாற! அவளும் ஒரு முறை கடலின் கூடலை நிமிர்த்து பார்த்து பிறகு செவ்விதழ் பிரியாமல் ஹ்ம்ம் என்று ஆமோதித்தாய்!
இல்லை இறங்கி வந்தாய்!  நான் முழுமனதாய் மன்னிப்பு கேட்கவில்லை என்று அறிந்தும் கூட!

கடல் கதிரவன் சென்று, நிலா மகளின் சாட்சியாக!
காதல் அங்கே மேலும் அழகானது! ஊடல் பரிணாம மாற்றம் அடைந்தது!

மறுபடி மனது யோசிப்பதற்கு முன்பு(மூளைக்கு பெரியதாய் இங்கு வேலை இல்லை), வலக்கரம் மிக அதிகபிரசங்கித்தனமாய் அவளை வளைத்தது! அவள் முகம் சாய்ந்தது என் தோள்கள் நோக்கி!

அந்த கூர் நாசியின் விசும்பல், இன்னும் என்னை இறுக்கி கொள் என்பதற்கு சமிங்க்ஜை என்று எனக்கு தெரியாதா?

காற்றிற்கு பழிப்பு காட்டிவிட்டு அணைத்துக்கொண்டேன்! காற்று புகா இடைவெளி விட்டு!


மனோஜ்குமார் பாண்டியன்(மனு)

Wednesday, September 23, 2015

காக்கா (கூ)முட்டைமுதன் முறையாக டெல்லி நோக்கி பயணம் அதுவும் ஒரு மாத காலம் டெல்லி நொய்டா என NCR எனப்படும் நேஷனல் காபிடல் ரீஜியன் சுற்றி வாழ்க்கை என்று நினைத்து பார்க்கையில் மனம் சிறிது துணுக்குறவே செய்தது.. இருப்பினும் 23ம் புலிகேசி படத்தில் வருவது போல விரலை ஆட்டி  வாங்கி விட்டோம் என்று எனக்கு நானே தைரியம் சொல்லி கொண்டு கிளம்பி விட்டேன்..

எதற்கு துணுக்கு என்று கேட்டால், முதல் விஷயம் நமக்கு ஹிந்தி அறவே தெரியாது. இரண்டாவது என் சக பணியாளர்கள் நொய்டா என்னும் உத்தரபிரதேசத்தில் இருக்கும் அந்த ஊரை பற்றி பெருமையாய் சொன்ன விதம்தான் முக்கிய காரணம்..  இவர்கள் ஏற்றி விட்ட விதத்தில் எதோ ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தில் போய் குதிக்க போகின்றோம் என்ற  எண்ணத்தில்தான் விமானம் ஏறினேன்!!முதல் முறை விமான பயணம்! எல்லா கவலைகளும் உடைந்து ஊருக்கு போறோம் என்ற குதூகலம் மட்டும் ஒட்டி கொண்டது.. எனக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி ஒரு வழியாக இருப்பிடம் அடைந்தேன். பெரியதாய் எந்த பிரச்சனையும் இல்லை ஆனாலும் இன்றும் நாம் அங்கு மதராசியாய்தான் முக்கால்வாசி நபர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறோம் என்பது மட்டும் தெரிந்தது.. இங்க வா மச்சி எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்னு சொன்ன வடகிந்திய நண்பர்கள் அங்கு போன பிறகு கண்டுகொள்ளவே இல்லை.. (இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததே) பெரிதாக அலட்டி கொள்ளாமல் முடிந்தவரை அருகில் இருக்கும் இடங்களுக்கு மட்டும் அலுவல் நேரம் முடிந்ததும் போய் வந்தேன்!

இடையில் என் டீமில் இருக்கும் ஒருவரிடம் பேசும்போது.. வருவதற்கு பயந்தேன் என சொல்ல அவர் ஏன் என்று கேட்க.. நான் என் நண்பர்களின் அனுபவங்களை கூறினேன்.. அதே பகுதியை சேர்ந்த மற்றொறு பணியாளர் அது சரிதான் இங்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவுதான் என ஒத்துக்கொள்ள மற்றொரு நபர் விவாதத்திற்காக என் நண்பர்கள் கூட சென்னையில் நிறைய திருடு போவதாக சொன்னார்கள் என ஆரம்பிக்க அவர் நோக்கம் புரிந்து நான் பேச்சை வளர்க்கவில்லை...


 ஒரு வாரம் இப்படியே செல்கையில் டெல்லியில் தங்கி நொய்டாவில் எனது அலுவலகத்தில் பணி புரியும் ஒருவர் நட்பு கிடைத்தது!  பழகிய அன்றே நீ தனியாய் அலுத்து இருப்பாய் படத்துக்கு போகலாம் என்று கிட்டத்தட்ட இழுத்து போனார் என்னை! TGIP மால் நொய்டாவில் ஒரு முக்கியமான வணிக வளாகம் பெரியதும் கூட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கிளம்ப எத்தனிக்கையில்.. நண்பர் உங்கள் மடிக்கணிணி பையை கையோடு எடுத்து கொள்ளுங்கள் என கூற.. நான் காருக்குள்ளதான இருக்கு பரவாயில்லை என்றேன்..அதற்கு அவர் இந்த ஊரில் எங்கேயும் சிறிது அஜாக்கிரதையா இருந்தாலும் திருடிடுவாங்க அப்படின்னு சிரிச்சிட்டே சொல்ல.. அப்படி ஒன்றும் ஊர் மோசமாய் தெரியவில்லையே டிபிக்கல் சௌத் இந்தியன் நார்த் இந்தியன் ஈகோவால் மிகைப்படுத்தபடுகிறது என நினைத்து கொண்டேன்..  சிறிது நாட்கள் பிறகு  அது மிகைப்படுத்தப்பட்டது இல்லை என நான் உணர்ந்த தருணம் வந்தது..
தி நகரில் இருந்து என்னை போலவே அங்கு வந்து தங்கியிருந்த மற்றொரு நண்பர் அறிமுகமானார்.. விடுமுறை நாள் என்பதால் கடைத்தெருவுக்கு சென்று வரலாம் என முடிவேடுத்தோம்.. பாலிக்கா பஜார் என்னும் இடம் டெல்லி இராஜீவ் சௌக் அருகில் இருந்தது.. மெட்ரோவில் சென்றால் நோய்டாவில் இருந்து 30 நிமிடங்களே ஆகும் பேருந்து என்றால் ஒரு மணி நேரம் குறைந்து போக முடியாது.. என்னிடம் மெட்ரோ அட்டை இருந்ததால் அவர் மட்டும் பயணச்சீட்டு எடுக்க இரயில் ஏறினோம்.. நண்பர் ஓரளவு ஹிந்தி பேசுவும்.. நன்றாகவே புரிந்துகொள்ளவும் செய்தார்... வழி நெடுக அவரும் வழக்கம் போல பயமுறுத்தி கொண்டும் உஷார்ப்படுத்தி கொண்டும் வந்தார்.. எனது பின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து முன் பையில் வைத்து கொண்டேன்..

பஜாரில் அரை குறை இந்தியில் சமாளித்து பொருட்களை வாங்கி கொண்டு திரும்ப இரயில் நிலையம் வந்தோம்.. இவர் பசிக்கிறது என்று காய்கறி காய்ந்த ரொட்டியை வாங்க நின்றார்.. அப்போ ஒரு வாண்டு வந்து இரண்டு பேருக்கும் நடுவில் நுழைய வழிவிட்டு வாங்கி வந்தோம்.. மறுபடி அவர் மட்டும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நிற்க நான் ஓரு நான்கடி தள்ளி சுவற்றில் சாய்ந்து நின்றேன். 

அப்பொழுது அதே வாண்டு அவருக்கு பின்னாடி வந்து வரிசையில் நின்றது.. அதிகம் பத்து வயது இருக்கலாம.. நானெல்லாம் பக்கத்து தெருவுக்கே அந்த வயசுல போனது இல்ல பசங்க மெட்ரோ வரைக்கும் போரங்களேன்னு யோசிக்கும்போது ஏய் ன் னு நண்பர் கத்த சாது போல் நின்ற அவன் கையில் இருந்து இவர் கைப்பேசியும் சில நூறு ரூபாய்களும் கீழே விழ எதோ உள்ளுணர்வில் ஓட முயன்றவனை எக்கி பிடித்து இழுத்து நிறுத்தினேன். என் நண்பர் பயணச்சீட்டு வாங்க குனியும்போது சடாரென பையில் கை விட்டு கைப்பேசியை திருட முயல இவர் சுதாரித்ததால் தப்பியது.. 

மாட்டிக்கொண்ட பயத்தில் அழ ஆரம்பித்தவனை பார்க்க தர்மசங்கடமாய் இருந்தது.. கோவத்தில் இருந்த நண்பர் கை வீசி பளார் என்று அறைந்து விட்டார்..அவனுக்கு சித்தமும் எனக்கு மனமும் கலங்கி விட்டது.. உங்க பொருள் எல்லாம் இருக்கான்னு கேட்டேன்.. இருக்கு என்றார்.. அவன் மீதான பிடியை தளர்த்தி ஜாவோ என்றேன்.. அவன் திருடினான் என்பதை விட ஒரு சிறுவனை அடித்துவிட்டார் என்றே வருத்தமாக இருந்தது.. நண்பர் எதோ ஆத்திரத்தில் அடித்து விட்டேன் எனக்கும் கஷ்டமாதான் இருக்கு என்றார்.. மீண்டும் அந்த சிறுவனின் முகத்தை நினைவு கூர்ந்தேன் எப்படி பார்த்தாலும் சந்தேகப்படவே முடியாத முகம்.. ஆனால் கண் முன்னே பார்த்தாகி விட்டது நம்பிதான் ஆகனும்.. அடித்தது ஒருபுறம் வலித்தாலும்.. அதிலிருந்து எவர் அருகில் நின்றாலும் ஒரு எச்சரிக்கை உணர்வும்.... ஒரு சந்தேக உணர்வும் தானாக ஒட்டி கொண்டதை உணர்ந்தேன்... 

என் நண்பர்களின் அனுபவங்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்படவில்லை என தெளிவாக தோன்றியது.. 

இப்பவும் சொல்கிறேன் அது அம்புட்டு மோசமான ஊர் இல்லை.. 
ஆனால் கொஞ்சம் மோசம்தான்....


இது  காக்கா (கூ)முட்டை, தவறு யாருடையதோ!!... எதற்கும் கவனமாய் இருங்கள்

                                                          ~~மனோஜ்குமார் பாண்டியன்